< Back
மாநில செய்திகள்
தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது
மாநில செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஆட்டோ டிரைவர் கைது

தினத்தந்தி
|
3 May 2024 10:51 PM IST

நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் மிரட்டி உள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். பிளஸ்-2 வரை படித்துள்ள அந்த இளம்பெண், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் இளம்பெண்ணின் பாட்டி, இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஆட்டோ டிரைவரான ரவிராஜ் (23) என்பவர், இளம்பெண்ணின் வீட்டுக்குள் நைசாக நுழைந்தார்.

பின்னர் கதவை மூடிக்கொண்டு ரவிராஜ், தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இளம்பெண்ணிடம் நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக கூறி ரவிராஜ் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் இளம்பெண்ணின் கையில் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதற்கிடையே வெளியே சென்றிருந்த இளம்பெண்ணின் பாட்டி, வீட்டுக்கு திரும்பி வந்தார். இதை பார்த்த ரவிராஜ், அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த இளம்பெண், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து அந்த இளம்பெண், குமராட்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்