சேலம்
தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை?
|கெங்கவல்லியில் ரத்த வெள்ளத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காதல் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கெங்கவல்லி:-
கெங்கவல்லியில் ரத்த வெள்ளத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காதல் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரத்தவெள்ளத்தில் பிணம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் வசிப்பவர் முருகன் என்ற சதீஷ் (வயது 42), விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (30), எம்.ஏ., பி.எட். பட்டதாரியான அவர், தனியார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலையில் பள்ளி முடிந்து வனிதா வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்குள் நுழையும் போது அங்கு சதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த அறை முழுவதும் ரத்தம் படிந்து இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வனிதா கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அவர்களும், சதீஷ் உடலை பார்த்து கதறி அழுதனர்.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சதீஷ் உடல் அருகில் காய்கறி நறுக்கும் கத்தி ஒன்று கிடந்தது. சதீஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது கையிலும் நரம்பு அறுக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் விரைந்து வந்து பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த ரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தினர். மோப்பநாய் லில்லி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.
அது, சதீஷ் இறந்து கிடந்த இடத்தில் இருந்து அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் வரை சென்று திரும்பி வந்தது. அங்கு கிடந்த கத்தியை மீட்ட போலீசார், பிணமாக கிடந்த சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
கலப்பு திருமணம்
சதீசும், வனிதாவும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2014-ம் ஆண்டு இருவரது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் சர்வேஸ் என்ற மகன் உள்ளான். அந்த சிறுவன், வனிதா பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். சதீஷ், ஒழுங்காக வேலைக்கு செல்லாமலும், மது அருந்தும் பழக்கம் உள்ளவராகவும் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தை நடத்துவதற்கு பல்வேறு நபர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்கியதாக தெரிகிறது.
அப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஒரு கட்டத்தில் தான் வசிக்கும் வீடு மற்றும் தனது நிலத்தை ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்ததாகவும் தெரிகிறது. அடமான பணம் வந்ததும் கடனை அடைக்க நினைத்தாராம்.
காதல் மனைவியிடம் விசாரணை
எனவே வீட்டை விற்க சதீஷ் முடிவு செய்துள்ளார். இந்த விவரங்கள் எதையும் வனிதா தெரிந்து கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையேதான் நேற்று காலையில் வனிதா பள்ளிக்கு சென்று உள்ளார். மாலையில் மகனுடன் வீடு திரும்பிய போது சதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக வனிதாவை, போலீசார் கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.