சென்னை
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு: 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
|முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை போரூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் கோபிகண்ணன். இவர், போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
போலீஸ்காரர் கோபிகண்ணன், தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை அதிக அளவில் பகிர்ந்ததுடன், அவரே அவதூறாக பேசுவது போன்ற ஒரு வீடியோவையும் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ்காரர் கோபிகண்ணன், முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது உறுதியானது.
இதையடுத்து போலீஸ்காரர் கோபிகண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் நேற்று கோபிகண்ணனை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதேபோல் தமிழ்நாட்டு சட்டசபையில் போலீஸ்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்புகளை தேனாம்பேட்டை போலீஸ் நிலைய ஏட்டு பாலமுருகன் விமர்சனம் செய்து 'வாட்ஸ்-அப்' மற்றும் முகநூலில் 'மீம்ஸ்' போட்டு கருத்து பதிவிட்டார். இந்த தகவல் உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.