< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் பற்றி அவதூறு: கோவை பாஜக பெண் பிரமுகர் கைது

சிறந்த சமூக வலைதள செயல்பட்டாளர் விருதை உமா கார்கிக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழங்கியது போது எடுத்தப்படம்

மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் பற்றி அவதூறு: கோவை பாஜக பெண் பிரமுகர் கைது

தினத்தந்தி
|
20 Jun 2023 3:23 PM IST

முதல்-அமைச்சர் பற்றி அவதூறு கருத்து பரப்பிய கோவை பாஜக பெண் பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதேசமயம் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களை பதிவிட்டார்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.

சிங்காநல்லூரைச் சேர்ந்த உமாகார்கி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் பெரியார், மணியம்மை குறித்தும் அவதூறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவதூறு மீம்ஸ்களையும் வெளியிடுகிறார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பரப்பி வருகிறார். எனவே உமா கார்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பா.ஜ.க.வினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் உமா கார்கி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று கோவை காளப்பட்டியில் பா.ஜ.க. சமூக வலைதள செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறந்த சமூக வலைதள செயல்பட்டாளருக்கு விருது உமா கார்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி உமா கார்கியை கவுரவித்தார். விருது பெற்ற மறுநாளிலேயே உமா கார்கி, கைது செய்யப்பட்டு உள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்