< Back
மாநில செய்திகள்
விண்ணை தொடும் பூக்கள் விலை
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விண்ணை தொடும் பூக்கள் விலை

தினத்தந்தி
|
31 Dec 2022 1:36 AM IST

பூக்கள் விலை விண்ணை தொடுகிறது.

விழாக்காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரம்பலூரில் நேற்று மல்லிகை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அரியலூரில் இன்று (சனிக்கிழமை) மல்லிகைப்பூ கிலோ ஆயிரம் ரூபாயை தொடும் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

விரும்பியபடி வாங்க முடியவில்லை

தென்னவநல்லூர் கிராமத்தை சேர்ந்த தீபா:- பெண்களுக்கு பூ என்றால் மிகவும் பிடிக்கும். மங்களகரமான எல்லா நிகழ்வுகளிலும் பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. இந்நிலையில் மல்லிகை, முல்லை போன்ற பூக்களுக்கு தற்போது சீசன் இல்லாததால் அதிக அளவு விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் உள்ளூர் பூ வியாபாரிகள் மல்லிகை, முல்லை போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து விற்பதில்லை. வாசமில்லாத காக்கட்டான் பூ போன்ற பூக்கள்தான் அதிகமாக கிடைக்கிறது. பூக்களின் விலை அதிகமாக உள்ளதால் பெண்கள் விரும்பியபடி பூ வாங்கி வைத்துக்கொள்ள முடிவதில்லை. அதே நேரம் பூக்களுக்கு நாங்கள் கொடுக்கும் விலை நியாயமாக அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சென்று சேர்ந்தால் மகிழ்ச்சிதான். பூக்கள் விலை உயர்வால் அதை வாங்குபவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

தவிர்க்க முடியவில்லை

அரியலூரை சேர்ந்த பூ வியாபாரி கஜலட்சுமி:- மார்கழி மாதத்தில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் தை மாதத்தில் பொங்கல் பண்டிகை போன்றவற்றால் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. மேலும் பனிக்காலம் என்பதால் பூக்களின் வரத்து குறைவதாக உள்ளது. ஆனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளதால் பூக்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதனால் பண்டிகை காலங்களில் கோவிலுக்கு பூஜைக்காகவும், தலையில் சூடிக்கொள்ளவும் பூக்கள் வாங்க வருபவர்கள், அவற்றின் விலையை கேட்டதும், குறைவாகவோ அல்லது பூக்களை வாங்காமலேயே செல்லும் நிலை உள்ளது.

மேலும் செய்திகள்