கரூர்
விண்ணை தொடும் பூக்கள் விலை
|விழாக்காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.
பூக்கள் விளைச்சல் குறைந்தது
ஆனால் வடகிழக்கு பருவ மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து கரூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், முல்லை பூ கிலோ ரூ.1,500-க்கும் விற்பனையானது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. இதனால் மாயனூர், வாங்கல், நெரூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரூர் பூ மார்க்கெட்டிற்கு வழக்கமாக 500 கிலோவுக்கு மேல் பூக்கள் வரும். ஆனால் தற்போது குறைந்த அளவிலான பூக்கள் மட்டுமே வருகின்றன.
பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
பனியால் பாதிப்பு
குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டி பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ரமேஷ்:- பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ளது. பூக்கள் அரும்பு எடுக்கும் பொழுதே செடியில் கருகி விடுகின்றன. சீசன் சமயத்தில் ஒரு செடியில் 100 பூக்கள் பூக்கும் என்றால் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பூக்கள் பூக்கின்றன. சிலர் தோட்டம் வைத்துள்ளனர். பலர் பூக்களை மார்க்கெட்டில் வாங்கி கட்டி சில்லறையாக விற்கின்றனர். மல்லிகை பூ இந்த சீசனில் செடியிலேயே கருகி விடுகிறது. இதுதவிர ஜாதி, முல்லை போன்ற பூக்கள் கிலோ ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. அதை நாங்கள் வாங்கி சில்லறையாக விற்கும்போது முகூர்த்த நாட்களே இல்லாத போது அதிக விலைக்கு பூக்களை விற்கிறீர்கள் என்று பொதுமக்கள் கேட்கின்றனர். வாசனை பூக்கள் வரத்து குறைவாக இருப்பதால் வாசனை இல்லாத பூக்களான காக்கரட்டான் போன்ற பூக்களை தற்போது விற்று வருகிறோம். பூக்கள் வரத்து குறைவான இந்த சீசனில் பூ விற்கும் வியாபாரிகளுக்கு பெருமளவு நஷ்டமே ஏற்படுகிறது.
விலை அதிகம்
குளித்தலை தெப்பக்குளத் தெருவை சேர்ந்த தேவிபாலா:- இந்த மாதம் பூக்களின் விலை அதிகமாக உள்ளது. விசேஷ நாட்கள் ஏதும் இல்லாத இந்த சமயத்தில் பூக்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. மல்லிகை பூக்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மற்ற பூக்களை விட அந்த பூவின் விலை அதிகம். விலை உயர்வின் காரணமாக நடுத்தர மக்கள் பூக்களை வாங்கி உபயோகப்படுத்துவதே குறைவு. வாசனையற்ற பூக்களை சூடுவதை பலரும் விரும்புவதில்லை. வீட்டு விசேஷம் போன்ற இடங்களுக்கு செல்லும் போதும், பூக்களை வைத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் போதும் விலை அதிகமானாலும் சிறிய அளவிலான பூக்களையாவது வாங்கி உபயோகப்படுத்த வேண்டியநிலை உள்ளது.
செடியில் இருந்து உதிரும் பூக்கள்
புன்னம் சத்திரத்தை சேர்ந்த இலஞ்சியம்:- தற்போது கரூர் மாவட்டத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காரணமாக செடியில் இருந்து பூக்கள் உதிர்ந்து விடுகிறது. இதனால் தேவை அதிகம் இருந்தும் வரத்து குறைவால் விலை அதிகமாக காணப்படுகிறது.
பண்டுதகாரன்புதூரை சேர்ந்த சுவேதா:- திருமணம் உள்பட சுபகாரியங்களுக்கு பெண்கள் குண்டு மல்லி பூக்களை தலையில் வைத்துக் கொண்டு செல்வது வழக்கம். தற்போது குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதனால் குறைந்த விலைக்கு விற்கும் பூக்களை வாங்கி தலையில் வைத்துக்கொண்டு செல்கிறோம். அதேபோல் சபரிமலை சீசன் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு குறைந்த அளவிலான பூக்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
செவ்வந்தி பாளையத்தை சேர்ந்த பாப்பாத்தி:- மாவட்டத்தில் பொதுமக்கள் இடையே பூக்களின் தேவை அதிகம் இருந்தாலும் பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் சிலர் பூக்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
ஒரு முழம் மல்லிகை பூ ரூ.150-க்கு விற்பனை
மண்மங்கலம் பகுதியை சேர்ந்த சவுந்தர்யா:- பனி காலம் ஆரம்பத்திலிருந்து குண்டு மல்லி, முல்லை மற்றும் பல்வேறு வகையான பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக உதிரிப்பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ.150 வரை வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். இதன் காரணமாக எங்களை போன்ற இளம் பெண்கள் குண்டு மல்லி, முல்லை போன்ற வாசனை உள்ள பூக்களை வாங்கி தலையில் வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் விவசாயிகளுக்கும் பூக்கள் விலை கட்டுபடியாக வேண்டி உள்ளது.
பஞ்சமாதேவியை சேர்ந்த வைஷ்ணவி:- கொரோனா தொற்று காலத்தில் விசேஷ நிகழ்வுகள் குறைந்து காணப்பட்டது. இதனால் பூக்களின் தேவை குறைந்து இருந்தது. தற்போது அதிகளவிலான விசேஷங்கள் மற்றும் சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தாலும் பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் பூக்கள் கருகி விடுவதால் விற்பனைக்கு குறைந்த அளவிலான பூக்களே வருகின்றன. இதுவே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம்.
பிளாஸ்டிக் பூ
தோகைமலை அருகே மேலவெளியூரை சேர்ந்த மலர்கொடி:- தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. இதனால் பிளாஸ்டிக் பூக்களை தலையில் வைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் கோவிலுக்கு முன்பு ரூ.100-க்கு வாங்கி சென்ற மாலை தற்போது ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
விலை குறைய வாய்ப்பில்லை
வேலாயுதம்பாளையம் பகுதியில் பூக்கடை நடத்தி வரும் நாராயணன்:- நாங்கள் பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு சென்று உதிரிப்பூக்களை ஏலம் எடுத்து வாங்கி வந்து பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, அரளி போன்ற பல்வேறு பூக்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் பூக்களின் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதுதான். மேலும், பூக்களின் தேவை அதிகரிப்பின் காரணமாகவும் விலை உயர்ந்துள்ளது. தற்போது மார்கழி மாதத்தில் கோவில் விசேஷங்கள், கோவில் பண்டிகைகள் அதிகளவில் இருப்பதால் கோவில்களுக்கு உதிரிப்பூக்களும், மாலைகளும் அதிகளவில் கொடுக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக பூக்களை அதிக விலைக்கு வாங்கி வந்து மாலை கட்டி கோவிலுக்கு கொடுத்து வருகிறோம். மல்லிகை பூக்கள் தற்போது சீசன் இல்லை. இதனால் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. தற்போதைக்கு பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பூக்களின் விலை விவரம்:-
கரூர் பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோவில்) விவரம் வருமாறு:-
மல்லிகை -ரூ.2,000
முல்லை -ரூ.1,500
ஜாதி பூ - ரூ.1,000
கனகாம்பரம் -ரூ.800
ரோஜா -ரூ.150
சம்பங்கி -ரூ.120
அரளி -ரூ.120