சென்னை
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு பயிற்சி
|தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வருகிற 8-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. வருகிற 8, 9 மற்றும் 10-ந்தேதி என 3 நாட்கள் சென்னையில் காலை 10 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பெண்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சிறந்த வல்லுனர்களால் நடத்தப்பட உள்ளது. இதற்கு கட்டணம் கிடையாது. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கலந்துகொள்ளும் பெண்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதும் அல்லது சிறிய அளவில் அந்த தொழிலை செய்பவராகவும் இருக்க வேண்டும். இந்த பயிற்சியில் 3 நாட்களும் ஏற்றுமதி, இறக்குமதிக்கான அனைத்து விவரங்களும், வங்கி சார்ந்த விவரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர்களால் தெளிவாக வழங்கப்படும்.
எனவே பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமும், தகுதியும் உள்ள பெண்கள் (பெயர், இடம், செல்போன் எண், செய்யும் தொழில், ஐ.இ. கோடு (இருந்தால்) போன்ற விவரங்களை 7010250168, 9659671245 என்ற எண்களில் எஸ்.எம்.எஸ். மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
5-ந்தேதி (இன்று) மாலை 6 மணிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். கண்டிப்பாக முன்பதிவு செய்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் சங்கத்தின் உறுப்பினராகி உங்களது விவரங்களை பதிவு செய்து சங்கத்தின் மூலமாக பயிற்சிகள் மற்றும் பயன்பெற விரும்பினால் தங்களது 'ஆன்டிராய்டு போனில்', form.wewatn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
பெண்கள் தங்களது அனைத்து தயாரிப்புகளையும் தாங்கள் வாங்கி விற்கும் பொருட்களையும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கு எந்தவித கட்டணமும் இன்றி சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்துள்ள https://rebrand.ly/Eshopee-ல் பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் தங்களது வியாபாரத்தை விரிவுப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.