கடலூர்
கடலூரில் போலீசாருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி
|கடலூரில் மாவட்ட போலீசாருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீசார் மற்றும் சமூக பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட போலீசாருக்கான திறன் வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி கடலூரில் நடந்தது. பயிற்சிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழிலரசி தலைமை தாங்கி, போலீசார் போக்சோ வழக்குகளில் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் இருந்து எவ்வாறு வாக்குமூலத்தை பதிவு செய்வது, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது, இளம்சிறார் குற்றவாளிகளை எவ்வாறு கையாளுவது, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வது, குழந்தை திருமணத்தை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
இதில் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், வக்கீல்கள் செந்தில்முருகன், முருகவேல், மாவட்ட குழந்தை நல அலுவலர் கஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தை திருமண சட்டம், இளைஞர் நீதி சட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிற்சியில் மாவட்டம் முழுவதில் இருந்தும் போலீசார் கலந்து கொண்டனர்.