தஞ்சாவூர்
தஞ்சையில், தலா ரூ.25 லட்சம் செலவில் 6 நகர்ப்புற நலவாழ்வு மையம்
|தஞ்சையில் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 6 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என மேயர் சண்.ராமநாதன் தகவல் தெரிவித்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 6 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என மேயர் சண்.ராமநாதன் தகவல் தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டம்
தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்தது. துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-மேத்தா (தி.மு.க) :- அடுத்தமாதம் (ஏப்ரல்) 4, 5 ஆகிய தேதிகளில் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழாவும், மே 1-ந் தேதி பெரியகோவில் தேரோட்டமும் நடைபெறுவதால் தஞ்சை 4 ராஜவீதிகளில் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.கண்ணுக்கினியாள் (அ.ம.மு.க) :- எனது 36-வது வார்டு பகுதிகளில் உள்ள சாக்கடையையும், சாலைகளையும் சீரமைத்து தர வேண்டும்.
முறைகேடு நடக்க வாய்ப்பு
எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் (அ.தி.மு.க) :- மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அள்ள அவுட்சோர்சிங் முறையில் டெண்டர் விடப்படும் என்ற தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இதனால் பல்வேறு முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.மேயர் சண்.ராமநாதன்:- முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.ஜெய்சதீஷ் (பா.ஜ.க) :- 31-வது வார்டில் பாதாள சாக்கடை குழியின் மேல் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.மேயர் சண்.ராமநாதன்:- பாதாள சாக்கடை குழி உடைப்பு சரி செய்யப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
நகர்ப்புற நலவாழ்வு மையம்
உஷா (தி.மு.க) :- 39-வது வார்டில் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும்.செந்தில்குமாரி (தி.மு.க) :- சீரமைக்கப்பட்டுள்ள அழகி குளம் கரையோரம் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை வசதி செய்து தர வேண்டும். அழகிகுளம் அருகில் உள்ள காலி இடத்தில் நியாயவிலை கடை கட்டி தர வேண்டும்.மேயர்:- தஞ்சை அண்ணாநகர், வண்டிக்காரத்தெரு, சின்னையாபிள்ளை சத்திரம், பூமால்ராவுத்தர் கோவில் தெரு, ஏ.ஒய்.ஏ.நாடார் ரோடு, நாலுகால் மண்டம் ஆகிய 6 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் நகர்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார்.இவ்வாறு கவுன்சிலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.