< Back
மாநில செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 14 பேர் உயிரிழப்பு - அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
மாநில செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 14 பேர் உயிரிழப்பு - அறிக்கை தர கலெக்டர் உத்தரவு

தினத்தந்தி
|
17 Oct 2023 11:52 PM IST

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

சிவகாசி,

சிவகாசி கங்காகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மகன் சுந்தரமூர்த்தி (வயது 43). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ரெங்கப்பாளையம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையையொட்டி உள்ள பகுதியில் சுந்தரமூர்த்திக்கு பட்டாசு கடையும், சேமிப்பு கிடங்கும் உள்ளது.

இந்த நிலையில் மதியம் வெளியூரில் இருந்து பட்டாசு வாங்க வந்த சிலர் சுந்தரமூர்த்தியின் கடைக்கு சென்று சில வகை பட்டாசுகளை தேர்வு செய்துள்ளனர். அதில் சில பட்டாசுகளை கடையின் வெளியே வைத்து வெடித்து பார்த்துள்ளனர். இதில் ஒரு பட்டாசு வெடித்து கடைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. அப்போது கடையின் பின்புறம் பெண்கள் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை பண்டல் போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதால் புகை மண்டலம் ஏற்பட்டது. இதனால் கடையின் உள்ளே இருந்து தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து எம். புதுப்பட்டி போலீசார் வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தி சம்பவ இடத்தை அடைந்தனர். பின்னர் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேர்ல் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அப்போதும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட முடியாமல் தீயணைப்பு வீரர்களும், அதிகரிகளும் தவித்தனர். பின்னர் சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 13 பேர் பலியாகினர்.

அதேபோல, சிவகாசிக்கு அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சக்கரம் ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். சிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் ஒரே நாளில் 14 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அம்மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்