விருதுநகர்
சிவகாசி உழவர்சந்தையை செயல்படுத்த வேண்டும்
|சிவகாசி உழவர்சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.
சிவகாசி,
சிவகாசி உழவர்சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது.
உழவர்சந்தை
சிவகாசி நகரின் மையப்பகுதியில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 101-வது உழவர்சந்தை என்ற பெருமை இதற்கு உண்டு. விவசாயிகள் வந்து செல்ல வசதியாக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு இந்த உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக உழவர் சந்தை செயல்படாமல் போனது. பின்னர் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உழவர்சந்தை பழையப்படி செயல்படும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் பெயரளவுக்கு தான் செயல்பட்டது. இந்தநிலையில் உழவர் சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியானது.
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், கவுன்சிலர் ராஜேஷ் ஆகியோர் உழவர் சந்தைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளை உழவர் சந்தையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆய்வு பணி முடிந்து 10 மாதங்கள் ஆகிறது. தற்போது வரை உழவர் சந்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் போதிய இடம் கிடைக்காதவர்கள் சிவகாசி சிவன் கோவில் அருகில் நடைபாதை கடைகள் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
அதிகாரிகள் நடவடிக்கை
இதனை தவிர்க்க நடை பாதை வியாபாரிகளுக்கு உழவர்சந்தையில் கடைகள் ஒதுக்கி கொடுத்தால் வியாபாரிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் சிவன் கோவில் அருகில் தற்போது ஏற்பட்டு வரும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர் மத்திய மாவட்ட தலைவர் டேனியல் கோரிக்கை விடுத்துள்ளார்.