சிவகாசி பட்டாசு ஆலை விபத்து; காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
|சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என் விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அண்மைக்காலங்களில் பட்டாசு ஆலைகள் மற்றும் வெடி ஆலைகளில் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வாரத்திற்கு ஒரு விபத்து என்பது வாடிக்கையாகி விட்டது.
பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.