சிவகங்கை: கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்
|சிவகங்கையில், கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சிவகங்கை,
மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர், பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் இல்லத்திற்கு தனது மனைவி, குழந்தையுடன் வந்துள்ளனர்.
இந்நிலையில், சூரிய பிரகாசின் மனைவி, தனது குழந்தைக்கு பவுடர் போட்டு, கண் மை கொண்டு பொட்டு வைத்துள்ளார். அப்போது, கண் மை டப்பாவை குழந்தையின் அருகிலேயே போட்டுவிட்டு அவர் சமையலறைக்கு சென்றுவிட்டார். அருகில் இருந்த கண் மை டப்பாவை எடுத்த குழந்தை, வாயில் போட்டுகொண்டது. அப்போது தொண்டையில் டப்பா சிக்கியதால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த குழந்தையின் தாய், பதறிப்போய் டப்பாவை வெளியில் எடுக்க முயற்சி செய்துள்ளார். எதிர்பாராத விதமாக குழந்தை டப்பாவை விழுங்கி விட்டது. குழந்தையின் வாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக குழந்தையை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை விழுங்கி இறந்த சம்பவம் அவரது குடும்பத்தார்கள், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.