< Back
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் பாதிப்பு: விரைவில் நிலைமை சீரடையும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
மாநில செய்திகள்

மிக்ஜம் புயல் பாதிப்பு: விரைவில் நிலைமை சீரடையும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

தினத்தந்தி
|
6 Dec 2023 9:21 PM IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

சென்னை,

மிக்ஜம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமும் சென்னையை விட்டு அகலவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில், சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பக்கமும் மழைநீர் சூழ்ந்துள்ளது. புயல் சென்னையை கடந்து செல்லும்போது இருந்ததைவிட தற்போது குறைந்திருந்தாலும், இன்னமும் முழுதாக தண்ணீர் வடிந்துவிடவில்லை.

இதனால் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இதேபோல் சென்னையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல், அமைச்சர்கள் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலையில் தென்சென்னை பகுதியில் வடசென்னை பகுதியில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் மிக்ஜம் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்