புதுக்கோட்டை
பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி
|காரையூர் அருகே பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
தற்கொலை முயற்சி
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள முள்ளிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட (100 நாள் வேலை) பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அப்போது செல்வம் மனைவி கலைச்செல்வி என்பவர் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டையை வாங்க வந்தார். இதைப்பார்த்த பெண் ஒருவர் ஊராட்சி தலைவரை செல்போனில் தொடர்பு கொண்டு கலைச்செல்வி பணித்தள பொறுப்பாளராக இருக்கக்கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார். இதனால் மனமுடைந்த கலைச்செல்வி மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
போலீசில் புகார்
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர், செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்ட பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார் அளித்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.