விருதுநகர்
சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகள்
|பயிற்சியாளர்கள் இல்லாமல் சர்வதேச யோகா போட்டியில் சகோதரிகள் சாதனை படைத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரிகளான விஷாலி (வயது18), சக்தி பிரியா (17) ஆகியோர் பங்கேற்றனர்.இந்தபோட்டியில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். இதையடுத்து அவர்கள் நேற்று காலை சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பினர். பதக்கம் வென்ற சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் கிராம மக்கள் பேரணியாக அழைத்து சென்றனர்.
இதுகுறித்து பதக்கம் வென்ற சகோதரிகள் கூறியதாவது:-
நாங்கள் இருவரும் யாரிடமும் யோகா பயிற்சி பெறவில்லை. யூடியூப் மூலமாகவே பயிற்சி செய்ய கற்றுக்கொண்டோம். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு தமிழக அரசு ஒரு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என்றனர். சாதனை படைத்த சகோதரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.