சென்னை
வெளிநாட்டிற்கு செல்ல இருந்த என்ஜினீயரை வழியனுப்ப வந்த சகோதரி சாவு - சென்னை விமான நிலையத்தில் சோகம்
|வெளிநாட்டிற்கு செல்ல இருந்த என்ஜினீயரை வழியனுப்ப வந்தபோது, பிரிவு தாங்க முடியாமல் அவரது சகோதரி மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தை சேர்ந்தவர் சுப்ரியா (வயது 35). இவருடைய தம்பி வெங்கட்ராஜேஷ். என்ஜினீயரான இவருக்கு பிரான்ஸ் நாட்டில் மென்பொறியாளராக வேலை கிடைத்தது.
இதையடுத்து வேலையில் சேர பிரான்ஸ் செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த வெங்கட்ராஜேஷை வழியனுப்புவதற்காக சகோதரி சுப்ரியா மற்றும் அவரது கணவர் கிரண்குமார் ஆகியோர் உடன் வந்தனர்.
இதையடுத்து விமான நிலைய வளாகத்துக்குள் அக்காள் சுப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்த வெங்கட்ராஜேஷ் அவர்களிடமிருந்து விடை பெற்று விமான நிலையத்தின் உள்ளே செல்ல தொடங்கினாா்.
அப்போது சகோதரனின் பிரிவு தாங்க முடியாமல் சுப்ரியா திடீரென மயங்கி விழுந்தாா். உடனே அங்கு இருந்த சக பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். விமான நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து விமான நிலையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சுப்ரியாவை அழைத்து சென்று பரிசோதித்ததில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து சகோதரி உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் வெங்கட்ராஜேஷ் கதறி அழுதார். மேலும், தன்னுடைய வெளிநாட்டு பயணத்தையும் ரத்து செய்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய போலீசார் விரைந்து வந்து சுப்ரியா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்த தம்பியை வழியனுப்ப விமானநிலையம் வந்தபோது பிரிவு தாங்காமல் விமான நிலையத்திலேயே சகோதரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.