கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி பலி
|கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவர் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு ஸ்ரீநிகா (வயது 5) என்ற மகளும், அனிருத் (3) என்ற மகனும் இருந்தனர்.
இதற்கிடையே சந்திரிகா தனது மகள், மகனுடன் கொல்லஅள்ளி பூலான்குட்டையில் வசித்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீநிகா, அனிருத் தங்களது வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கிணற்றில் அக்காள், தம்பி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மணி நேரத்துக்கு யாரும் செல்லாததால் அவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. இதனிடையே விளையாட சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த சந்திரிகா அவர்களை பல்வேறு இடங்களில் தேடினார்.
உடல் மீட்பு
அப்போது தனது 2 குழந்தைகளும் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்து கதறி அழுதார். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த அக்காள், தம்பியின் உடலை மீட்டனர்.