< Back
மாநில செய்திகள்
சீர்காழி வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்
மாநில செய்திகள்

சீர்காழி வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

தினத்தந்தி
|
14 Nov 2022 12:05 PM IST

சீர்காழி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

சீர்காழி,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.

இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். பாய், போர்வை, அரிசி, மளிகைபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்