தமிழ்நாட்டின் வரலாற்றுக்கதைகள் எதிர்காலத்தில் உங்களால் உருவாக்கப்படும் என நம்புகிறோம் - ராஜமவுலி பதிவை குறிப்பிட்டு அண்ணாமலை டுவீட்
|இயக்குனர் ராஜமவுளி, தமிழ்நாட்டில் தனது குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சென்னை,
மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜமவுளி. இவரது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது படங்களில் வரலாறு, புராணம் தொடர்பான காட்சியமைப்புகளை உருவாக்குவதை ராஜமவுளி வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜமவுளி, தமிழ்நாட்டில் தனது குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"தமிழ்நாட்டில் சாலை பயணம் மேற்கொள்ள நீண்ட நாட்களாக விரும்பினேன். என் மகளின் விருப்பப்படி கோயில்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தோம். ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம்.
எவ்வளவு நேர்த்தியான கட்டடக்கலை. பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் என பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பகோணம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது. இந்த சுற்றுப்பயணம் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது."
இவ்வாறு ராஜமவுளி தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுப்பயணம் குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்த இயக்குநர் ராஜமவுலி டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
சார், கோயில்கள் நிறைந்த இந்த பூமியில்( தமிழ்நாடு) உங்களது ஆன்மிக சுற்றுப்பயணம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டின் வரலாற்றுக்கதைகள் எதிர்காலத்தில் மகத்தான படைப்பாக உங்களால் உருவாக்கப்படும் என உங்கள் படைப்பின் ரசிகர்களாகிய நாங்கள் விரும்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.