மாநகர பஸ், மெட்ரோ ரெயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வசதி: டிசம்பரில் அமலாகிறது
|புதிய செயலி உருவாக்கப்பட்டு ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
சென்னையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் வேலைவாய்ப்பு, உயர் கல்வி காரணமாக அதிக அளவிலான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சென்னை வாழ் மக்கள் தங்கள் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள், மின்சார ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில், சிலர் தங்கள் அலுவலகம் செல்வதற்கு 3 வித போக்குவரத்து சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த 3 வித சேவைகளுக்கும் தனித்தனியே டிக்கெட் பெற்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கான மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 3 வித போக்குவரத்து சேவையையும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அதில், முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில் சேவையை ஒருங்கிணைத்து ஒரே டிக்கெட்டில் இந்த 2 சேவைகளையும் பயன்படுத்தும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டு ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பெங்களூருவை சேர்ந்த மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மின்சார ரெயில் சேவை உள்பட 3 வகை போக்குவரத்திலும் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.