< Back
மாநில செய்திகள்
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

தினத்தந்தி
|
10 Jun 2022 5:51 PM IST

சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. பல்லவ காலத்து குடவரை கோவில்களில் இதுவும் ஒன்று.

இந்த கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த 3-ந் தேதியன்று கொடியேற்றதுடன் தொடங்கி சாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. 5-ம் நாள் உற்சவமான நாச்சியார் திருக்கோலம், 6-ம் நாள் யானை வாகனம் என சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் வீதி உலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை யொட்டியுள்ள 2-வது மாடவீதியில் மசூதி உள்ளது. அதன் அருகே முஸ்லீம்கள் தேரோட்டத்தில் கலந்துக் கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர் வழங்கி வரவேற்றனர். இது அனைவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்துகள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஒற்றுமைக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டாக விளங்கியது.

மேலும் செய்திகள்