சென்னை
'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் புதிதாக 11 பூங்காக்கள்: விக்டோரியா மண்டபம் சுழல் அருங்காட்சியகமாக மாற்றப்படும்
|‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டு திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், விக்டோரியா மண்டபம் சுழல் அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிங்கார சென்னை 2.0
சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையில், 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த 2021-2022-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டு திடல்கள், மயான பூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயான பூமிகள், 16 பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் புராதன சின்னமான விக்டோரியா பொதுக்கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
ஒப்புதல்
'சிங்கார சென்னை 2.0' திட்ட பணிகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
சிறந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்துகின்ற வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் விளையாட்டு திடல்கள் அமையும்.
அருங்காட்சியகம்
செயற்கை குளம் மற்றும் மழைத்தோட்டங்களுடன் கடற்பாசி பூங்கா அமைய இருக்கிறது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து போராடவும், மழைநீரை நிலத்தில் செலுத்துவதின் மூலம் நிலத்தடி நீரை சேமித்திடவும் கடற்பாசி பூங்காக்கள் வாய்ப்பாக அமையும். சிறந்த கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பள்ளிக்கட்டிடங்கள் அமையும்.
விக்டோரியா பொது மண்டபத்தில் தரைத்தளமானது நிரந்தரமான மற்றும் சுழல் கண்காட்சி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. 3 பக்க காட்சியகங்கள், பார்வைக்கூடம் மற்றும் ஒரு அரை வட்ட காட்சியகம் அமையும். தரைத்தளத்தில் தனி நுழைவுவாயிலுடன் அருங்காட்சியகத்தின் அலுவலகம் அமையும். மேலும் அருங்காட்சியகத்தை ஒட்டி தேநீர் கூடமும் அமையும். முதல் தளத்தில் அருங்காட்சியகத்தின் பார்வை கூடத்தின் தொடர்ச்சியில் ஒரு ஓய்வு அறை, முக்கிய பிரமுகர்களுக்கான கூடம் மற்றும் பல்நோக்கு பயன்பாட்டிற்கான மண்டபம் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைய உள்ளது.
வெளிப்புற வளாகத்தில் சிறிய பசுமை புல்வெளி தோட்டம், வெளிப்புற அருங்காட்சியகம் மற்றும் செயல்திறன் அரங்கிற்கான ஏற்பாடுகள் உருவாக்கப்பட இருக்கிறது. கூடுதலாக முகப்பில் ஒளிரூட்டும் வெளிச்சத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.