< Back
மாநில செய்திகள்
கருணாநிதி நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம்: சென்னை மெரினா காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னை
மாநில செய்திகள்

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம்: சென்னை மெரினா காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
6 Aug 2023 1:22 PM IST

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா காமராஜர் சாலையில் மவுன ஊர்வலம் நடைபெற இருக்கிறது. ஊர்வலம் நடைபெறும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் நாளை காலை 8 மணியளவில் மவுன ஊர்வலமாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்குகிறது. எனவே ஊர்வலம் நடைபெறும் சமயத்தில் போக்குவரத்து மாற்றத்துக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மவுன ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனினும் தேவைப்படும்பட்சத்தில் போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை நோக்கி செல்ல அனுமதிக்காமல் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.

காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும்.

மவுன ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணாசாலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். இதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தை திட்டமிட்டு செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்