அரியலூர்
கும்பகோணம்-ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் இடையே ரெயில் பாதை அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்
|கும்பகோணம்-ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் இடையே ரெயில் பாதை அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம்-ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் தொடர்வண்டி பாதை வேண்டுவோர் கூட்டமைப்பின் தீர்மானத்தின்படி தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரையும், மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடந்து வருகிறது. இதில் சுமார் 500 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக கும்பகோணம்-ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் தொடர்வண்டி பாதை வேண்டுவோர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் மக்களிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கும், முதல்-அமைச்சருக்கும் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் சங்கம், அரிமா சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், அகில பாரத மூத்த குடிமக்கள் பென்சனர் சங்க கூட்டமைப்பு, ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் ஆகியவற்றின் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.