புதுக்கோட்டை
சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கோரி கையெழுத்து இயக்கம்
|சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க கோரியும், அது தொடர்பான சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கக்கோரியும் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் புதுக்கோட்டையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. 'சித்த மருத்துவ பல்கலைக்கழக வேண்டுகை குழு' சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தமிழ் மண்ணின் மூத்த மருத்துவமான சித்த மருத்துவத்துக்கு மேலும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அவற்றை ஆவணப்படுத்தவும், சித்த மருத்துவ கல்வியை தரப்படுத்தி வழங்கவும், அரசு சார்பில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு அண்மையில் இதற்கான சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் இயற்றி, சென்னையில் இடம் பார்த்து, நிதியும் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த பல்கலைக்கழகத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால், கையெழுத்திட அவரை வலியுறுத்தும் வகையில் ஒரு கோடி கையொப்பங்களை பெற்று கவர்னரை நேரில் சந்தித்து அளிக்க திட்டமிட்டுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர்.