சிக்னல் கோளாறு: கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை 30 நிமிடம் பாதிப்பு
|சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை 30 நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை,
சென்னையில் பிரதான போக்குவரத்து சேவைகளில் புறநகர் மின்சார ரெயில் முக்கிய இடம் வகிக்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து செல்கிறது. பணிக்காகவும், படிப்புக்காகவும், வியாபார ரீதியாகவும் ஏராளமானோர் பயணிக்கின்றனர்.
நேற்று காலை சென்னை கடற்கரை- தாம்பரம் மற்றும் தாம்பரம்-கடற்கரை நோக்கி மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. திடீரென காலை 9.50 மணியளவில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே உள்ள பகுதியில் சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.
பயணிகள் ஓட்டம்
இதனால் தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு- நூங்கம்பாக்கம், எழும்பூர்- சேத்துப்பட்டு என அனைத்து ரெயில் நிலையங்களின் இடையே ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மின்சார ரெயிலில் பயணம் செய்து அலுவலகங்களுக்கு செல்லும் பயணிகள் அலுவலகங்களுக்கு செல்ல நேரம் ஆனதால் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கீழே இறங்கி வெவ்வேறு பகுதியை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
சில பயணிகள் பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையம் நோக்கியும், சில பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்தை நோக்கியும், சில பயணிகள் தண்டவாளங்களின் வழியாக நடந்து அடுத்த ரெயில் நிலையங்களை நோக்கியும் சென்றனர். இவ்வாறாக பயணிகள் பலர் எப்படி விரைவாக அலுவலகம் செல்வது என பல்வேறு வழிகளை தேடி ஓடி சென்றதை பார்க்க முடிந்தது. சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்ட புறநகர் மின்சார ரெயில் சேவை, சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் சீரானது. ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன.