கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகரில் தொடரும் விபத்துகள்: முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
|கிருஷ்ணகிரி நகரில் தொடரும் விபத்துகளை குறைக்க முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரில் தொடரும் விபத்துகளை குறைக்க முக்கிய சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முக்கிய சாலைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக- கர்நாடக- ஆந்திர ஆகிய 3 மாநில எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டமாகும். கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்கின்றன. அதேபோல கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரக்கூடிய வாகனங்களும் ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக வருகின்றன.
இதனால் கிருஷ்ணகிரி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, குப்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் அமைந்துள்ளன.
தொடரும் விபத்துகள்
கன்னியாகுமரி- காஷ்மீர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பிரதான சாலைகள் சந்திக்கும் பகுதியாக கிருஷ்ணகிரி ஆவின் மேம்பால சாலை உள்ளது. கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில் விபத்துக்கள் நடந்ததாக கண்டறியப்பட்ட பகுதிகளான ஆவின் மேம்பாலம், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
ஆனாலும் விபத்துகள் நகரில் குறைந்தபாடில்லை. நகரின் முக்கிய சாலைகள் சந்திக்க கூடிய பகுதிகளில் சிக்னல்கள் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக ஆவின் மேம்பாலம் சந்திக்க கூடிய பகுதிகளில் சிக்னல்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மனம் போன போக்கில் செல்வதால் விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.
சர்வீஸ் சாலையும் தேவை
சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வரக்கூடிய வாகனமும், சேலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் சந்திக்க கூடிய பகுதியாக ஆவின் மேம்பாலம் உள்ளதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. அங்கு சிக்னல் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மேலும் ஆவின் மேம்பாலம் அருகில் அக்ரஹாரம், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
எனவே ஆவின் மேம்பாலத்தையொட்டி அந்த பகுதியில் சர்வீஸ் சாலையும் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
ரதி, அக்ரஹாரம், கிருஷ்ணகிரி:-
நாங்கள் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருகிறோம். கிருஷ்ணகிரிக்கு இரு சக்கர வாகனத்தில் வரும்போது சேலம் சாலை வழியாக வருகிறோம். அந்த நேரம் ஆவின் மேம்பாலத்தை கடக்கும் போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. அந்த இடத்தில் ராயக்கோட்டை மேம்பாலத்தில் உள்ளதை போல சிக்னல் அமைக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரக்கூடிய மக்கள் அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சிறிது தூரம் சர்வீஸ் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
வினோத், நாட்டான் கொட்டாய், கிருஷ்ணகிரி:-
நான் கோ-ஆப்ரேட்டிவ் காலனி பகுதியில் கடை நடத்தி வருகிறேன். தினமும் நாட்டான்கொட்டாய் பகுதியில் இருந்து சேலம் சாலை வழியாக வந்து ஆவின் மேம்பாலம், சேலம் ரோடு வழியாக நகருக்குள் வருகிறேன். இந்த சாலையில் ஆவின் மேம்பாலம் அருகில் சிக்னல்கள் இல்லாததால் சென்னையில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அதிவேகமாக வந்து வளைவில் திரும்புகின்றன. எனவே அந்த இடத்தில் சிக்னல் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் விபத்துக்கள் குறையும்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு
கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில் 5 ரோடு ரவுண்டானா மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே சிக்னல் உள்ளது. விபத்துகளை குறைக்க ஆவின் மேம்பாலம், நகரில் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் என முக்கிய இடங்களில் சிக்னல்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்பாக உள்ளது.