திருப்பூர்
தானியங்கி சிக்னல்கள் அமைத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும்
|உடுமலை கொழுமம் ரோடு பிரிவில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் தானியங்கி சிக்னல்கள் அமைத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை கொழுமம் ரோடு பிரிவில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் தானியங்கி சிக்னல்கள் அமைத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்காலிக தடுப்புகள்
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கொழுமம், குமரலிங்கம் வழியாக பழனி செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலை பிரியும் பகுதியில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
'தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதில் பெரும்பாலான வாகனங்கள் நகரப் பகுதிக்கான வேகக்கட்டுப்பாட்டைக் கடைபிடிக்காமல் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இதனால் ஐஸ்வர்யாநகர், காந்திநகர் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தற்காலிக தடுப்புகள் அமைத்து வேகத்தை கட்டுப்படுத்துகின்றனர். ஆனாலும் பல சாலை சந்திப்புகளில் தொடர்ச்சியாக சிறு சிறு விபத்துகள் நடப்பது தொடர்கதையாகவே உள்ளது. குறிப்பாக கொழுமம் ரோடு பிரிவில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
தானியங்கி சிக்னல்
கொழுமம், குமரலிங்கம் பகுதிகளில் பழமையான கோவில்கள் உள்ளது. மேலும் குமரலிங்கம் வழியாக சுற்றுலா தலமான அமராவதி அணைக்கு செல்லும் வழித்தடமாகவும் இந்த சாலை உள்ளது. இந்த சாலைக்கு அருகில் பல கிராமங்கள், ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் கொழுமம் ரோடு பிரிவில் வலதுபுறமாக திரும்பி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கின்றனர்.
அப்போது வாகனங்கள் மோதி விபத்து நடைபெறுகிறது. அத்துடன் பாதசாரிகள் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போதும் விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. சிறு விபத்துக்கள் நடக்கும்போது வேடிக்கை பார்ப்பதுடன் வாகனங்களையும் தாறுமாறாக இயக்குவதால் பெரிய அளவிலான விபத்துகள் நடைபெறும் அபாயம் உள்ளது.
எனவே இந்த சாலை சந்திப்பு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் சாலை சந்திப்பு குறித்து எச்சரிக்கும் விதமாக சூரிய சக்தியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் இந்த பகுதியில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அவையும் செயல்படாத நிலையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் தானியங்கி சிக்னல் அமைப்பதன் மூலம் மட்டுமே விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்'என்று பொதுமக்கள் கூறினர்.