திருவள்ளூர்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
|ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி நயபாக்கம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நயபாக்கம் கிராமத்தை சேர்ந்த திரளான இருளர் இன மக்கள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை கோரிக்கை மனுவுடன் வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நயபாக்கம் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் வீட்டுமனை பட்டா, ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் அரசின் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் அவதியுற்று வருகிறோம்.
தற்போது நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த குட்டை மற்றும் மயான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து தொழிற்சாலை கட்டி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர், இது தொடர்பான புகார் மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், இலுப்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.