திருவள்ளூர்
ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
|ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கல்லம்பேடு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அன்னபூரணி குமார் (வயது 40). அதே ஊராட்சியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அன்னபூரணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர். சூர்யபிரகாஷ் ஊராட்சி பகுதியில் நடந்து வரும் நலத்திட்டங்களுக்கு இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி அன்று கல்லம்பேடு ஊராட்சிக்குட்பட்ட ஏலம்பாக்கம் விநாயகர் கோவில் அருகே தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மூலம் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது.
இந்த பணிகளை கல்லம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னபூரணி குமார், துணைத்தலைவர் சரிதா அசோகன் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பணியை பார்வையிட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த சூர்யபிரகாஷ் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைவர் அண்ணபூரணி மற்றும் துணைத்தலைவர் சரிதா அசோகன் ஆகியோரை தரகுறைவாக பேசி தகராறில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கடந்த சனிக்கிழமை ஊராட்சி மன்ற தலைவர் அன்னபூரணி குமார் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாக சூரியபிரகாஷ் உள்பட 3 பேர் மீது மப்பேடு போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவரது புகாரின் மீது போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் சூரியபிரகாஷ் உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், ராம்குமார் ஆகியோர் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.