பெரம்பலூர்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பா போக்சோவில் கைது
|பெரம்பலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
முதலாம் ஆண்டு நினைவு நாள்...
பெரம்பலூர் அருகே ஒரு தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில், கணவர் இறந்து விட்டதால் அந்த பெண் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். கணவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த பெண் தனது 14 வயது மகளுடன் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.
அந்த பெண்ணின் மகள் 7-ம் வகுப்பிற்கு பிறகு படிப்பை தொடரவில்லை. பின்னர் மகளை தனது மாமியார் வீட்டில் விட்டு விட்டு அந்த பெண் மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்.
சிறுமி பலாத்காரம்
கடந்த 23-ந்தேதி மதியம் 14 வயது சிறுமியை தந்தையின் உடன் பிறந்த தம்பியான 27 வயதுடைய நபர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனக்கு நேர்ந்த துயரத்தை மறுநாள் அச்சிறுமி தனது தாயிடம் செல்போன் மூலம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதையடுத்து ஊருக்கு திரும்பி வந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டவருக்கு திருமணமாகி மனைவி, 2 ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.