பக்தர்கள் உடைக்கும் தேங்காய் எடுப்பதில் தகராறு; வாலிபருக்கு அரிவாள் வெட்டு..!
|சிவகங்கை அருகே பக்தர்கள் உடைக்கும் தேங்காய் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கருங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையா மகன் நாச்சியப்பன் என்ற அருண் (வயது 25) ஆவார்.மேலும் அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் ராசு வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கருங்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும் போது கோவில் முகப்பு தோற்றத்தில் தேங்காய் உடைப்பதும் வாடிக்கையான ஒன்றாகும். அப்படி நாள்தோறும் பக்தர்கள் உடைக்கும் தேங்காயை எடுக்கும்போது ராசுக்கும், அருணுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் ராசுக்கு இயற்கையாகவே இடது கை பாதி அளவு இல்லாத நிலையில் இருப்பதை ஒரு குறையாக அருண் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த ராசு கருங்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக முகப்பு தோற்றத்தில் மின் விளக்கை அணைத்துவிட்டு உறங்கிய நிலையில் இருந்த அருணை தலை, கை, கால் உட்பட சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அருண் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டதை அடுத்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் சேது இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அருணை மீட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் கொலைக் குற்றவாளி தப்பி ஓடிய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேங்காய் எடுப்பதில் வந்த தகராறு அமைதிப்படை திரைப்படத்தில் வரும் சினிமா காட்சியை போல இச்சம்பவம் அரங்கேறி உள்ளது என இப்பகுதியில் மக்களால் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.