கடலூர்
கடலூர் துறைமுகம் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்திய படகு பறிமுதல் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
|கடலூர் துறைமுகம் அருகே சுருக்குமடமி வலையை பயன்படுத்திய படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர் முதுநகர்,
சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனை மீறி மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க செல்கின்றனரா? என அவ்வப்போது மீன்வளத்துறை சார்பில் கண்காணிக்கபட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று கடலூர் துறைமுகம் அருகே உள்ள பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில், ஆய்வாளர் சதுருதீன், சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர்கள் மயில்வாகனன் மற்றும் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவலர் சாம்பசிவம், அடங்கிய குழுவினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
படகு பறிமுதல்
அப்போது, அரசின் தடை உத்தரவினை மீறி, ஒரு விசைப்படகில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடலூர் துறைமுகம் அருகே உள்ள தைக்கால்தோணித்துறை பகுதியில் வந்த அந்த விசைபடகை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த படகு ராசாப்பேட்டையைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து விசை படகு மற்றும் சுருக்குமடி வலையை போலீஸ் உதவியுடன், மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியது தொடர்பாக, ராசாப்பேட்டையை சேர்ந்த 7 மீனவர்கள் மீது கடலூர் துறைமுகம் போலீசில் மீன்வளதுறை அதிகாரிகள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாாித்து வருகின்றனர்.