கரூர்
தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?: சமூக ஆர்வலர்கள் கருத்து
|தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
பொறுமை இல்லை
சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை. அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அலங்காரம்
சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம். தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ஆர். நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு:- மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது. தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாக சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும். இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.
சிவாஜி கணேசன் சிலை
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-
என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது. மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும்.
சிலைகளை சுற்றி பாதுகாப்பு கம்பிகள்
கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகே காமராஜர் சிலை, அறிஞர் அண்ணா சிலை, லைட் ஹவுஸ் கார்னரில் காந்தி சிலை, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள், திருமாநிலையூரில் தந்தை பெரியார் சிலை, தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வ.உ. சிதம்பரனார் சிலை, வெங்கமேடு பகுதியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகள், கரூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே திருப்பூர் குமரன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த சிலைகள் அவ்வப்போது அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களை நினைவு கூறும் வகையில் அந்தந்த சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அமைந்திருக்கும் பெரும்பாலான சிலைகளை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், சிலைகளின் தலையின் மேல் பகுதியில் எந்தவித பாதுகாப்பும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவ்வப்போது பறவைகள் சிலைகள் மீது எச்சில்களை இட்டு செல்கின்றன. இந்நிலையில் முக்கிய தலைவர்களின் சிலைகளை பாதுகாக்கும் வகையில் அவற்றின் மேல் பகுதியில் பறவைகள் எச்சில் படாத வகையில் சிலைகளை பாதுகாக்க வேண்டும்.
பேணிகாக்க வேண்டும்
கரூரை சேர்ந்த அசோக்:-
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், லைட் ஹவுஸ் வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள், முக்கிய தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அந்த சிலைகளின் தலைவர்களுக்கு பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டுமே அந்த சிலைகளை சுத்தம் செய்து மாலை அணிவிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் அந்த சிலைகளை பராமரிப்பதை கையில் எடுத்து வாரத்தில் ஒரு நாளாவது அந்த சிலைகளை சுத்தம் செய்து அவ்வப்போது பேணி பாதுகாத்து வரவேண்டும். இது தலைவர்களை கவுரவ படுத்துவதுடன் வருங்கால சந்தததியர்கள், தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ள வழி வகுக்கும். மேலும் தலைவர்கள் நமது நாட்டிற்கு ஆற்றிய அரும் பணிகள் குறித்து தெரிந்து கொள்வதுடன், தாமும் அவர்கள் போன்று சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
சிலைகள் சுற்றிலும் கூண்டுகள்
குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம் அருகேயும், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவல கட்டிடத்தின் முன்பும் காந்தி சிலை உள்ளது. குளித்தலை அருகே புதுப்பாளையம் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை, தாளியாம்பட்டி பகுதியில் வ.உ.சி. சிலையும், குளித்தலை -மணப்பாறை சாலையில் சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் இந்திரா காந்தி சிலையும், இரணியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமத்துவபுரத்தில் பெரியார் சிலையும் உள்ளது. குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை, ஒத்தக்கடை பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சிலை ஆகியவை தவிர மற்ற சிலைகள் சுற்றிலும் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒத்தக்கடை பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை முழு உருவச்சிலையாக கடந்த 1988-ம் ஆண்டு அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை சுற்றிலும் சுவர்கள் எழுப்பப்பட்டு கான்கிரீட்டிலான மேற்கூரையும் முன்பகுதியில் இரும்பிலான கதவும் அமைக்கப்பட்டது. மேலும் சிலை மற்றும் இச்சிலையை சுற்றியுள்ள சிறிய கட்டிடம் கட்டப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் பல ஆண்டுகள் ஆன காரணத்தால் இக்கட்டித்தின் மேற்கூரை சேதமடைந்து, மேற்கூரையின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு பூச்சுகள் தொடர்ந்து உதிர்ந்து வருவதால் இதில் பொருத்தப்பட்டிருந்த கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த கம்பிகளும் துருப்பிடித்த நிலையில் மேற்கூரை மிகவும் வலுவிழந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்தால் அது இந்திரா காந்தியின் சிலை மேல் விழுந்து சிலையும் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
மேற்கூரை சேதம்
குளித்தலை அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெருமாள்:- ஒத்தக்கடை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்திரா காந்தி சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம், குடியரசு தினங்களில் மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வருகிறேன். தற்போது இச்சிலையை பராமரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். எனக்கு முன்பு எனது தந்தை இச்சிலையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த சிலை இருக்கும் கட்டிடத்தில் மேற்கூரை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து பலரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கட்டிடத்தை சீரமைக்க எந்தவித முயற்சியும் யாரும் எடுக்கவில்லை. எனவே ஒத்தக்கடை பகுதியில் உள்ள இந்திராகாந்தி சிலை உள்ள கட்டிடத்தை மராமத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்விளக்கு வேண்டும்
குளித்தலையை சேர்ந்த சுரேஷ்குமார்:-
குளித்தலை பஸ் நிலையம் அருகே முழு உருவ காந்திசிலை உள்ளது. உயரமான மேடையில் நின்ற நிலையில் திறந்த வெளியில் இந்த காந்தி சிலை ஏற்கனவே இருந்து வந்தது. இந்த சிலையை பாதுகாக்கும் பொருட்டு இச்சிலையை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இச்சிலை உள்ள மேடையின் கீழ் பகுதி சற்று பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல இரவு நேரங்களில் காந்தி சிலை அனைவருக்கும் நன்கு தெரியும் வகையில் காந்தி சிலை சுற்றியுள்ள இரும்பு கூண்டு பகுதியில் மின் விளக்கு அமைக்க வேண்டும்.
கான்கிரீட் படிக்கட்டுகள் வேண்டும்
நொய்யல் அருகே உள்ள முனிநாதபுரம் பகுதியை சேர்ந்த காளியப்பன்:-
முனிநாதபுரத்தில் கடந்த 1994-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டது. தற்போது சிலையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. இருப்பினும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் மழை, வெயில், பனி ஆகியவை சிலை மீது பட்டு சிலை சேதம் அடைந்து வருகிறது. எனவே இந்த சிலைக்கு நிழற்குடை அமைக்க வேண்டும். அதேபோல் மேலே ஏறி சிலையின் பீடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவதற்காக உள்ள இரும்பு ஏணி சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே கான்கிரீட் படிக்கட்டுகள் அமைத்து தர வேண்டும். சிலையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
சிதிலமடையாமல் பராமரித்து..
இதேபோல் வேலாயுதம்பாளையத்தில் இருந்து காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப் பள்ளியில் கடந்த 1993-ம் ஆண்டு மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது சிலைக்கு பள்ளி சார்பிலும், அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சார்பிலும் மாலை அணிவிக்க ஏணி வைத்து ஏற வேண்டியது உள்ளது. எனவே சிலைக்கு மாலை அணிவிக்க படிக்கட்டுகள் கட்டித்தர வேண்டும். அதேபோல் சிலையை சிதிலமடையாமல் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.