தேனி
மதுக்கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்
|பெரியகுளத்தில் மதுக்கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "பெரியகுளம்-கம்பம் சாலையில் மக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இங்கு பெண்கள் கல்லூரி, மருத்துவமனை, கோவில் போன்றவை உள்ளன.
இந்நிலையில், பெரியகுளத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை அருகில் மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இங்கு மதுபானக்கடை அமைத்தால் பக்தர்கள், நோயாளிகள், மாணவிகள் உள்பட பலரும் பாதிக்கப்படுவார்கள். வாகன விபத்துகள் அதிகரிக்கும். பொதுமக்களின் அமைதியான வாழ்வு கெட்டு பிரச்சினைகள் ஏற்படும். எனவே, இங்கு மதுபானக் கடை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
அதுபோல், கண்டமனூர் ஊராட்சி துணைத்தலைவர் சங்கிலியம்மாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதோடு, ஊராட்சி தலைவரின் குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையீடு செய்வதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தனர்.