பெரம்பலூர்
பெரம்பலூர் உழவர் சந்தையை சுற்றியிருந்த கடைகள் அகற்றம்
|கலெக்டர் உத்தரவின்பேரில் பெரம்பலூர் உழவர் சந்தையை சுற்றியிருந்த கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைகள் அகற்றம்
பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தையை நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உழவர் சந்தையை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு காய்கறிகள் உள்ளிட்ட கடைகள் இருக்கக்கூடாது என்ற அரசு உத்தரவை அமல்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராதா தலைமையிலான அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று காலை உழவர் சந்தையை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், பழக்கடைகள், மீன் கடைகள், டிபன் கடைகள் உள்ளிட்ட கடைகளை பெரம்பலூர் போலீசார் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றினர்.
அப்போது அந்த கடைகளின் உரிமையாளர்கள் எந்தவித முன்னறிவிப்பு இன்றி கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கடைகளை அப்புறப்படுத்தி அந்தப்பகுதியை தூய்மைப்படுத்தி விட்டு சென்றனர்.
கலெக்டரிடம் மனு
பின்னர் அகற்றப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கராஜ் தலைமையில் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். பெரம்பலூர் உழவா் சந்தை அருகே சாலையோரத்தில் பல ஆண்டுகளாக கடைகள் வைத்து நடத்தி வருகிறோம். கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்கு வரியும் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் எங்களது கடைகளை அகற்றி விட்டனர். மேலும் காய்கறிகள், பழங்களை, உணவு பொருட்களை குப்பைகள் அள்ளி செல்லும் வாகனங்களில் தூக்கி வீசிவிட்டனர். இதனால் வியாபாரிகளுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கான வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டாமல் நகராட்சி நிர்வாகம் அராஜக முறையில் கடைகளை அப்புறப்படுத்தி உள்ளது. மீண்டும் அதே இடத்தில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.