பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த கடைக்கு சீல்
|பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை கரிவலம்வந்த நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனர்.