ராமநாதபுரம்
வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
|வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
ராமநாதபுரம், டிச.8-
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாடகைதாரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி சொத்து வரி வாடகை உள்ளிட்டவற்றை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி வரி செலுத்தாதவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பலர் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாமல் இருப்பதோடு கடை வாடகையும் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு நேற்று முன்தினம் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 2 கடைகள் வாடகையை செலுத்தவில்லை. இதை தொடர்ந்து அந்த 2 கடைகளையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த மேற்கண்ட 2 கடைகளும் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வாடகை பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உடனடியாக பொதுமக்கள் தங்களின் நகராட்சி வரியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் சுரேந்திரன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.