தர்மபுரி
அரூரில் குட்கா விற்ற 4 கடைகளுக்கு `சீல்'
|அரூர்:
அரூர் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமான், தருமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 4 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து 4 கடைகளும் பூட்டிச் `சீல்' வைக்கப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தரமான உணவை சுகாதாரமான முறையில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அப்போது கடைகள், உணவகங்கள், பேக்கரிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.