< Back
மாநில செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

தினத்தந்தி
|
3 April 2023 12:08 AM IST

கந்தர்வகோட்டை அருகே போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டி மற்றும் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி ஊராட்சி வல்லம் புதூர் சாலையில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் ஆண்டுதோறும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி பசுமலைப்பட்டி பகுதியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் மற்றும் புதுக்கோட்டை போலீசார் தனித்தனியாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி (வயது 11) தலையில் பாய்ந்து படுகாயம் அடைந்தான்.

நவீன ரக துப்பாக்கிகள்

இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் சிறுவன் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி ஜனவரி மாதம் 3-ந் தேதி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து நார்த்தாமலை பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதின் விளைவாக நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தமிழக அரசு மூட உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி மலை தேர்வு செய்யப்பட்டு அங்கு நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.

போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு நவீன ரக துப்பாக்கிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் இந்த மையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்