< Back
மாநில செய்திகள்
பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி

தினத்தந்தி
|
10 April 2023 11:36 PM IST

தமிழக காவல் துறையில் பெண் போலீசார் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் திருச்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.

பொன்விழா

தமிழக காவல் துறையில் பெண் போலீசார் பணியில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழா ஆண்டாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயனின் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டலத்தில் போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர் வரை பணிபுரியும் பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தின் மலையடிவாரத்தில் போலீசாருக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடந்த இந்த போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்தார்.

31 பெண் போலீசார் பங்கேற்பு

இந்த போட்டியில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாநகரம், திருச்சி, தஞ்சாவூர் மாநகரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் பெண் போலீசார், பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 31 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் பெண் போலீசாருக்கு பிஸ்டல், இன்சாஸ், கார்பன் ஆகிய 3 வகையான துப்பாக்கிகள் வழங்கப்பட்டது. இவற்றில் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரான்சி மேரி முதலிடமும், திருவாரூர் மாவட்ட போலீஸ் சம்யுக்தா 2-ம் இடமும், நாகை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி 3-ம் இடமும் பிடித்தனர். இன்சாஸ் பிரிவில் திருச்சி மாநகர முதல் நிலை போலீஸ் செல்லமயில் முதலிடமும், புதுக்கோட்டை போலீஸ் ஏட்டு கலையரசி 2-ம் இடமும், நாகை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் சித்ரா 3-ம் இடமும் பிடித்தனர். கார்பன் பிரிவில் திருச்சி ஏட்டு சோபியா லாரன்ஸ் முதலிடமும், அரியலூர் ஆயுதப்படை போலீஸ் ராஜகுமாரி 2-ம் இடமும் மற்றும் திருச்சி மாவட்ட முதல் நிலை போலீஸ் வினோபா 3-ம் இடமும் பிடித்தனர்.

பரிசளிப்பு

இந்தப்போட்டியினை பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் (தலைமையிடம்), சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், பயிற்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பயிற்சி குழுவினர் முன்னிலை வகித்து மதிப்பெண் அடிப்படையில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் 3 இடங்களை தேர்வு செய்தனர். துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பெண் போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிசாக சுழற் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி கமிஷனர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமிஷனர் வரையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்