பெரம்பலூர்
திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி
|திருச்சி மத்திய மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், இன்சாஸ் பிரிவில் ஐ.ஜி. கார்த்திகேயன் முதலிடத்தை பிடித்தார்.
துப்பாக்கி சுடும் போட்டி
திருச்சி மத்திய மண்டலத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முதல் போலீஸ் ஐ.ஜி. வரை பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலத்தில் உள்ள போலீசார் துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்தது. போட்டியை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
போட்டியில் திருச்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் 18 போலீஸ் அதிகாரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்சாஸ், பிஸ்டல் ஆகிய 2 பிரிவுகளில் துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்பட்டது. இன்சாஸ் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் முதலிடமும், திருச்சி மாவட்டம், லால்குடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் 2-வது இடத்தையும், திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வைஷ்ணவி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சுழற்கோப்பை
பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ராஜன் முதலிடத்தையும், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் 2-வது இடத்தையும், திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு லில்லி கிரேஷி 3-வது இடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி.கார்த்திகேயன் சுழற்கோப்பைகளை பரிசாக வழங்கி பாராட்டினார்.
மேலும் துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவெறும்பூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகனுக்கு முதல் பரிசும், ஆலங்குடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினிக்கு 2-வது பரிசும், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயனுக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டன.