சென்னை
ரூ.30 லட்சம் கொள்ளை புகாரில் திடுக்கிடும் திருப்பம்: செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளை போனது ரூ.2¼ கோடி
|என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மொத்தம் ரூ.2¼ கோடி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா (வயது 36), மாலிக் (34), செல்லா (35), சித்திக் (35) ஆகிய 4 பேரும் சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மொத்தமாக செல்போன்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
கடந்த 13-ந்தேதி மர்மகும்பல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து இவர்களது வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்தி அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான வேலு என்ற வேங்கை அமரன், ரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய 6 பேர் கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 14 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்த முகமது பைசல் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் கோர்ட்டில் சரண் அடைந்த வேலு உள்பட 6 பேரையும் போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் அளித்த தகவலின்பேரில் மண்ணடி மலையப்பன் தெருவைச் சேர்ந்த சையத் முகமது சித்தீக் (38), அவருடைய அண்ணனான தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அலி ஜாஸ்மின் (42) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் சையத் முகமது சித்தீக், அப்பதுல்லாவின் செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்தான் இந்த கொள்ளை திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டதுடன், தனது நண்பர்கள் மற்றும் அண்ணனுக்கு திட்டம் தீட்டு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இந்த வழக்கில் மொத்தம் ரூ.2 கோடியே 30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டதும் உறுதியானது. ஆனால் புகார்தாரர் இந்த வழக்கில் வெறும் ரூ.30 லட்சம் மட்டும் கொள்ளை போனதாக புகார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கைதான 9 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 65 லட்சம் மற்றும் ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று போலீஸ் காவல் முடிந்து 6 பேரும், கைதான 3 பேரும் என 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அவர்களிடம்தான் கொள்ளையடிக்கப்பட்ட மீதி பணம் ரூ.65 லட்சம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.