< Back
மாநில செய்திகள்
அறுவடை நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் சின்ன வெங்காயம் விலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அறுவடை நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் சின்ன வெங்காயம் விலை

தினத்தந்தி
|
24 Feb 2023 12:30 AM IST

அறுவடை நேரத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து அதிர்ச்சி அளிப்பதால், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தமிழகத்தில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு தன்மை கொண்ட மண் வளம் காணப்படுகிறது. இதனால் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள், சின்னவெங்காயம், புகையிலை உள்பட அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

கத்தரி, தக்காளி உள்பட காய்கறிகள் மட்டுமின்றி கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற ஆங்கில காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. இதனால் குறிப்பாக காய்கறி விவசாயத்தில் திண்டுக்கல் தன்னிகரற்று விளங்குகிறது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளாவின் காய்கறி தேவையையும் திண்டுக்கல் பூர்த்தி செய்து வருகிறது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளில் இருந்து தமிழகம், கேரளாவுக்கு லாரிகளில் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சின்ன வெங்காயம்

இதில் சின்ன வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் விளையும் சின்ன வெங்காயம் 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை கொண்டது. இதனால் திண்டுக்கல் சின்ன வெங்காயத்துக்கு பல ஊர்களில் கடும்கிராக்கி உள்ளது.

அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளி நாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் விளையும் பயிர் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம்.

அறுவடை

எனவே இந்த ஆண்டு அம்மையநாயக்கனூர், சின்னாளப்பட்டி, ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை உள்பட பல பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு இருக்கிறது. சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இவை விளைச்சல் அடைந்து விட்டதால் அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

தற்போது சின்ன வெங்காயம் அறுவடை உச்சத்தை எட்டியதால் மார்க்கெட்டுகளுக்கு வரத்து அதிகரித்து இருக்கிறது. இதன் விளைவாக வெங்காயத்தில் விலை தினமும் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த மாதம் வரை மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்தபட்ச ஆதார விலை

ஆனால் விவசாயிகளிடம் கிலோ ரூ.10-க்கு தான் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது. நல்ல விளைச்சல் இருந்தும் அறுவடை நேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனால் கடனில் இருந்து மீள முடியவில்லையே என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்