கோடநாட்டில் "திடுக்கிடும்" சம்பவங்கள் நடந்துள்ளன: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி
|4 ஆண்டுகள் முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பொறுப்புடன் பேச வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஈபிஎஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை படித்து விட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 15 மாத திமுக ஆட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது
4 ஆண்டுகள் முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பொறுப்புடன் பேச வேண்டும். சொத்து வரி உயர்வுக்கு யார் காரணம் என்பதை சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சொத்து வரி உயர்த்தப்படாவிட்டால், மத்திய அரசின் மானியங்கள் நிறுத்தப்படும் என்பதை தெளிவாக விளக்கமளித்தார் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் எப்படியெல்லாம் உயர்த்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதுமட்டுமல்லாமல், கோடநாடு வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கோடநாடு விவகாரத்தில் திடுக்கிடும் அளவிற்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம் - ஒழுங்கை பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. கோடநாடு கொலை, கொள்ளை பற்றி ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அவரின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும். எனவே இதையெல்லாம் மூடி முறைப்பதற்காக சட்டம் ஒழுங்கை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்" என்றார்.