சிவராத்திரியையொட்டி குமரியில் சிவாலய ஓட்டம்
|சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுக்கடை,
நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) சிவராத்திரி விழா நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் சிவராத்திரியையொட்டி 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்பு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சிவாலய ஓட்டம் நேற்று முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கியது. பக்தர்கள் முதலில் கோவிலில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி காவி உடை அணிந்து, கையில் விசிறி, விபூதி பொட்டலத்துடன் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து 'கோபாலா... கோவிந்தா...' என்ற பக்தி கோஷத்துடன் ஓட்டத்தை தொடங்கினர். நேற்று காலையில் ஒருசிலர் ஓட தொடங்கினர். பிற்பகல் முதல் ஆண்கள், பெண்கள் என பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
110 கிலோ மீட்டர்
முன்சிறையில் ஓட்டத்தை தொடங்கிய பக்தர்கள் காப்புக்காடு, சென்னித்தோட்டம், மார்த்தாண்டம் வழியாக 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 3-வது சிவாலயமான திற்பரப்பு வீரபத்திரர் கோவிலை நோக்கி ஓடத்தொடங்கினர்.
தொடர்ந்து திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சாமிகோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் வழியாக இன்று (சனிக்கிழமை) நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைகிறார்கள். இந்த ஓட்டத்தின்போது பக்தர்கள் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருகிறார்கள்.
இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.