தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது
|தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
சென்னை,
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித்தவித்து வரும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து, அப்பொருட்களை வழங்க உரிய அனுமதி வழங்குமாறு கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி அன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினார். மத்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதெடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டதுடன் கடந்த மாதம் 15-ந் தேதி கடிதமும் எழுதி நினைவூட்டினார்.
அத்துடன், தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்து பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசிய பொருட்களை அனுப்ப மத்திய அரசின் அனுமதி கோரியதுடன், கடந்த மாதம் 29-ந் தேதி சட்டசபையிலும் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டப்படி, இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை நிறைவேற்ற வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு அரசு மருந்து பொருட்கள் நிறுவனம் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.
தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த 13-ந் தேதி மத்திய அரசு அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை 'டான் பின்-99' என்ற சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்துக்கு நேற்று மாலை வந்தார். துறைமுகத்தின் துணைத்தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
பின்னர் முதல்-அமைச்சர் கப்பலில் ஏறி நிவாரண பொருட்கள் ஏற்றபட்டதை பார்வையிட்டார். தொடர்ந்து கப்பல் நிறுத்தும் இடம் அருகில் போடப்பட்டிருந்த மேடையில் இருந்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் மாதிரி தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை துணைத்தூதர் டி.வெங்கடேசுவரனிடம் வழங்கினார். பின்னர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக 9 ஆயிரம் டன் அரிசி, 200 டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 டன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இதனுடைய மதிப்பு ரூ.45 கோடி ஆகும்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாசர், செஞ்சி மஸ்தான், பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ், தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பிரபாகர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக தலைவர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை துணைத்தூதர் டி.வெங்கடேசுவரன் கூறும்போது, 'இலங்கைக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொண்டேன். இந்த நிவாரண பொருட்கள் தமிழர்கள் மட்டும் அல்லாது இலங்கையில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முறையாக வினியோகம் செய்யப்படும்' என்றார்.