< Back
மாநில செய்திகள்
துபாயில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1¼ கோடி தங்கம்- இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை
மதுரை
மாநில செய்திகள்

துபாயில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1¼ கோடி தங்கம்- இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை

தினத்தந்தி
|
18 Sept 2023 1:28 AM IST

மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.


மதுரை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

துபாயில் இருந்து கடத்தல்

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து, ஒரு தனியார் விமானம் வந்தது. மேலும், அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சுங்க அதிகாரிகள், அந்த விமானத்தில் மதுரைக்கு வந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது தங்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் விமானத்தின் உள்பகுதியிலும் சோதனை செய்தனர்.

2 கிலோ தங்கம்

அதுபோல் விமான உள்வளாக பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் சோதனை செய்தபோது, அதில் உள்ள 2 குப்பை தொட்டிகளில் களிமண் போன்ற பொருள் இருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் எடுத்து பார்த்தபோது, ஒரு கிலோ 124 கிராம், 800 கிராம் எடை என மொத்தம் ஒரு கிலோ 924 கிலோ கிராம் எடை கொண்ட களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை பயணிகள்

விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 2 பேர் கழிவறைக்கு சென்று திரும்பியது தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்தனர். அதில், அவர்கள் இலங்கையை சேர்ந்த 2 பயணிகள் என்பதும், துபாயில் இருந்து மதுரை வழியாக இலங்கை சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், தங்கம் அவர்கள் கொண்டு வரவில்லை என கூறினர். மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 17 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "அவர்கள் 2 பேரும் மதுரை வழியாக இலங்கை கொழும்புவுக்கு செல்ல இருந்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் தங்கம் அவர்களுக்கானது இல்லை என தெரிவித்தனர். அதனால் அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்து, இது குறித்த தகவலை இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறோம். தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்