தேனி
கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
|தேனி அருகே கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தேனி அருகே குன்னூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கணேஷ் பாண்டியன் (வயது 36). இவரது மனைவி சீமா. இவர்கள் இருவரும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு பணி முடிந்து இருவரும் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். கணேஷ்பாண்டியன் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார். பின்னால் அவருடைய மனைவி அமர்ந்து இருந்தார்.
தேனி-மதுரை சாலையில் கருவேல்நாயக்கன்பட்டியை கடந்து சென்றபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்து இருந்த மர்ம நபர், சீமா கழுத்தில் மஞ்சள் கயிற்றில் அணிந்து இருந்த 2½ பவுன் தாலியை பறித்தார். இதில் மஞ்சள் கயிறு அறுந்து தாலியோடு மர்ம நபரின் கையில் சிக்கியது. பின்னர் மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கணேஷ் பாண்டியன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.